தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு

சென்னை: ரேஷனில் விற்கப்படும், 19 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு, தரமற்றதாக இருப்பதால், மக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். 'காலம் காலமாக நடக்கும் இந்த ஊழல் பணியை, மாறி மாறி பதவி ஏற்கும் அரசியல் கட்சிகள் நிறுத்தினால் மட்டுமே, தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணப்படும்.


மளிகை தொகுப்பு


'இல்லையெனில், ரேஷன் பொருளே கொடுக்க வேண்டாம் என்ற நிலையாவது எடுக்கட்டும்' என, பொருள் வாங்க வரும் மக்கள், பொங்கி எழுகின்றனர். தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயர்ந்தன. இதனால், வேலையில்லாமல் முடங்கியுள்ள ஏழை மக்கள், அதிக விலை கொடுத்து, மளிகை பொருட்களை வாங்க சிரமப்பட்டனர். இதையடுத்து, ரேஷன் கடைகளில், குறிப்பிட்ட எடையில், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், புளி, மிளகாய் துாள் உள்ளிட்ட, 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, தலா, 500 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது.


அவற்றின் வெளிச்சந்தை மதிப்பு, 597 ரூபாய் என, தெரிவிக்கப் பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், 50 கோடி ரூபாய்க்கு, மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கப்பட்டன.அவற்றை, தனித்தனியாக, 'பாக்கெட்' செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், மளிகை பொருட்களை மொத்தமாக அனுப்பி, பாக்கெட் செய்து விற்குமாறு, ரேஷன் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஏப்ரல், 21 முதல், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில், 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு விற்பனை துவங்கியது.


 


'கமிஷன்'


அவை தரமற்று இருப்பதால், மக்கள் வாங்க தயக்கம் காட்டு கின்றனர். அதனால், இதுவரை, ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் கூட விற்கப்படாமல், கடைகளில் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 2.07 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், கூட்டுறவு துறை சார்பில், 10 லட்சம் மளிகை தொகுப்புகள் மட்டுமே விற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு கடையில், 1,000 கார்டுதாரர்களுக்கு மேல் உள்ள நிலையில், 40 முதல் 50 பேருக்கான மளிகை பொருட்கள் மட்டும் அனுப்பப்பட்டன. அவற்றை வாங்க பலரும் முயற்சிப்பர் என்பதால், விரைவில் விற்று விடும் என, எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.